search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை சிறை"

    மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் வேலைக்கு ஆட்கள் தேவை என இலங்கை சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கை நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இனி கருணை காட்ட மாட்டோம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தூக்கிலிட்டு கொல்லப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் பாராளுமன்ற உரையின்போது தெரிவித்திருந்தார்.

    இலங்கையில் கடைசியாக கடந்த 1976-ம் ஆண்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த அதிபர்கள் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான எந்த உத்தரவிலும் கையொப்பமிடவில்லை.

    இதனால், கடந்த 42 ஆண்டுகளில் எந்த கைதியும் அங்குள்ள சிறைகளில் தூக்கிலிட்டு கொல்லப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 48 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 30 பேர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து வழக்காடி வருகின்றனர். 18 பேரின் உயிர்கள் அதிபரின் கையொப்பத்துக்கான உத்தரவில் ஊசலாடி வருகிறது.

    இந்நிலையில், அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் அறிவித்திருந்ததுபோல் இலங்கை சிறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் தூக்கிலிடும் பணியை செய்து முடிக்க யாரும் தற்போது இல்லை.

    அந்த பணியில் இருந்த ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றப்பிறகு மூன்று பேர் இந்த வேலைக்காக சேர்ந்தனர். ஆனால், அவர்களும் குறுகிய காலத்துக்குள் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    எனவே, ஒருவேளை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சிறையில் இருக்கும் கைதிகளில் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு திடீரென்று உத்தரவிட்டால் அந்த காரியத்தை செய்து முடிப்பதற்காக புதிய கொலையாளிகளை நியமிக்க இலங்கை சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

    இதுதொடர்பான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிக்கான இருவரை தேர்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அந்நாட்டின் சிறைத்துறை கமிஷனர் தனசிங்கே தெரிவித்துள்ளார். #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நல்லெண்ண அடிப்படையில் 11 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட 17 மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 11 பேரையும் சேர்த்து 28 பேர் அங்கு உள்ளனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கை சிறையில் இருந்து மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    ராமேசுவரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 4 மீனவர்களையும், அவர்களது படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    இதேபோல அதே பகுதியில் இருந்து கடந்த 7-ந் தேதி கடலுக்கு சென்ற ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த மீனவர்கள் ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த 8 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களையும் விடுதலை செய்தார். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட இரு படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் நேற்று முன்தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று மேலும் 8 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajapaksa #NamalRajapaksa
    கொழும்பு:

    2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

    குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.

    தற்போது, இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க் களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதே நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்தது.

    ராஜபக்சேவை அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்து பேசியபோது, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிதர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு ராஜபக்சே ஒப்புக்கொள்ளாததால் அவருக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில்தான் இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ராஜபக்சேயின் மகனும், எம்.பி.யுமான நமல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புதிய நிபந்தனை விதித்தார். அவர் டுவிட்டரில் தமிழில் பதிவு செய்த தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரம் பேசுவதுபோல் அமைந்துள்ளது. அதாவது ஓட்டெடுப்பில் தனது தந்தைக்கு ஆதரவு தரவேண்டும் என்று அவர் மறைமுகமாக வலியுறுத்தி இருக்கிறார்.

    அதில், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி நபர்களின் சுயநல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மற்றொரு பதிவில், ‘தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்த்து வைக்கும் வகையில் கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் அதிபர் மற்றும் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்’ என்று கூறி இருக்கிறார்.

    225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதைய நிலையில் ராஜபக்சேவை 100 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவை 103 எம்.பி.க்களும் ஆதரிக்கின்றனர்.

    மீதமுள்ள 22 எம்.பி.க்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே ராஜபக்சே அணிக்கு தாவி விட்டார். இன்னும் 4 எம்.பி.க்களின் ராஜபக்சே பக்கம் தாவலாம் என்று கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவு கிடைத்தாலும் கூட ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 9 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

    இதனால் மீதமுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் 6 உறுப்பினர்கள், இன்னொரு சிறு கட்சியின் ஒரு எம்.பி.யின் ஆதரவுடன் விக்ரமசிங்கே எளிதில் 113 என்னும் பெரும்பான்மை இலக்கை எட்டி விடுவார் என்று கருதப்படுகிறது.

    இதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ராஜபக்சே மகன் மறைமுக பேரத்தில் ஈடுபட்டு உள்ளார் என்று இலங்கையின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். #Rajapaksa #NamalRajapaksa
    தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.

    பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்த நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார்.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே - ரணில் விக்ரமசிங்கே இருவருமே தங்களுக்கு போதுமான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 96 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற மேலும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கேவுக்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேரை ராஜபக்சே வளைத்து விட்டதாகவும் இதன் மூலம் அவருக்கு 101 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையில், வரும் 7-ம் தேதி பாராளுமன்றத்தை கூட்ட அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். அப்போது ராஜபக்சே அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தீர்மானத்தை ஆதரித்தும், ராஜபக்சேவுக்கு எதிராகவும் வாக்களிக்கப் போவதாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 21 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ் எம்.பி.க்களின் மனப்போக்கை மாற்றி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக ராஜபக்சே காய்நகர்த்தி வருகிறார்.

    இதில் ஒருகட்டமாக தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.


    இந்த தகவலை ராஜபக்சேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் என  நாமல் ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான உச்சகட்ட போர் முடிவடைந்த பின்னர் சரணடைந்த பல்லாயிரம் தமிழர்களையும், பின்னர் அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பலரையும் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் ராஜபக்சே அரசு முன்னர் அடைத்து வைத்தது.

    எவ்வித விசாரணையுமின்றி இப்படி பல ஆண்டுகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முந்தைய ராஜபக்சே அரசும், பின்னர் வந்த மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான அரசும் நிராகரித்து வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.  #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    இலங்கை சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalaniswami #IndianFishermen #PMModi
    சென்னை:

    இலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.



    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் தேதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக என்று கூறிக்கொண்டு நிறைவேற்றப்பட்ட மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் தண்டனை விதித்து இலங்கை ரூபாயில் ரூ.60 லட்சம், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அவர்கள் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    நான் ஏற்கனவே கடந்த 7.7.2017 அன்றும், அதைத்தொடர்ந்து மேலும் பல கடிதங்களிலும், இலங்கையில் மீன்வளம் மற்றும் கடல்வளம் சட்டம் 1996 மற்றும் மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த திருத்தங்களையும், அதனால் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன்.

    மத்திய அரசாங்கத்தின் உதவியோடு, தமிழக அரசு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கி நடவடிக்கை எடுத்துவரும் இந்த சூழ்நிலையில், இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டில் இருந்து வரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் திருத்தங்களை அமல்படுத்த முன்வந்திருப்பது, இந்த உணர்ச்சிகரமான பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான மத்திய அரசாங்கம் எடுக்கும் ராஜ்ய முயற்சிகளை ஏளனம் செய்வதுபோல இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழக மீனவர்கள் மனதில் ஒரு குழப்பமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நம்முடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யவும், நமது மீனவர்கள் அனைவரையும் அபராதமோ, ஜெயில் தண்டனையோ இல்லாத வகையில் விடுதலை செய்ய, இலங்கை நீதிமன்றங்களில் திறமையாக வாதங்களை நடத்தவும், வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், இலங்கை சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் 16 மீனவர்களையும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேற்கண்டவாறு அந்த கடித்ததில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #IndianFishermen #PMModi
    இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #TNFishermen
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியில் இருந்து 3 நாட்டுப்படகுகளிலும், நாகையில் இருந்து ஒரு நாட்டுப்படகிலும் கடந்த 8-ந் தேதி 27 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 27 தமிழக மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மீனவர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, 27 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அதில் ஒரு படகில் தடை செய்யப்பட்ட வலைகள் இருந்ததால் அதில் சென்ற 7 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தகவலை நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்தார். 
    ×